மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான கே.வரதராசன் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான கே.வரதராசன் கரூரில் அவரது மகன் வீட்டில் இருந்துவந்தார். அவர் சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில், சனிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் காலமானார்.
கே.வரதராசன் 1946 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். கட்டுமான துறை வரைவாளர் படிப்பை முடித்த அவர், நெல்லை பாளையங்கோட்டையில் பொதுப் பணித்துறை பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிய போது, செங்கொடி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர், அரசுப் பணியை துறந்துவிட்டு கட்சியின் முழு நேர ஊழியரானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டச் செயலாளராகவும் பின்னர், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக மத்தியக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2 முறை அரசியல் தலைமைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வகித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியினரால் தோழர் கே.வரதராஜன் என்று அழைக்கப்பட்ட இவர் விவசாய சங்கத்தின் பல போராட்டங்களுக்கு முன்னின்று தலைமை தாங்கியவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். ‘தத்துவ தரிசனம்’ என்ற நூலையும், கிராமப்புற விவசாய இயக்கம் தொடர்பான பல சிறு நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது மனைவி சரோஜா அம்மாள், 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். கே.வரதராஜனுக்கு பாஸ்கரன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். கே.வரதராஜனின் இறுதி நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது.
கே.வரதராஜனின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு கட்சி நிகழ்ச்சிகல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.