உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுமக்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடை விதித்தும், அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸார் இருக்கும்போதே, தீட்சிதர்கள் கதவை உள் பக்கமாக பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்ததாவது; "மத்திய அரசு பொது சிவில் போர்டு சட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறிவருகிறது. ஆனால் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் உள்ளது.
நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தயாராக இல்லை. காரணம் என்னவென்றால், பெண்களைப் பற்றிய பாஜகவின் புரிதல், மனுநீதியில் எவ்வாறு சொல்லப்பட்டு இருக்கிறதோ அதுபோல பெண்கள் இருக்க வேண்டும் என்ற போக்கு, அதிகாரத்துக்கு பெண்கள் வரக்கூடாது என்ற எண்ணம். இதுபோல் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பெண்களின் வேலை வாய்ப்பு பறி போயிருக்கிறது. இவற்றை தடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
1986-ம் ஆண்டு குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பங்களில் ஆண்டுதோறும் குழந்தைத் திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது ஆதாரப்பூர்வமாக இந்த செயல் தெரிவிக்கப்பட்டதால் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்களைக் கைது செய்த போலீசாரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டிக்கிறார். பெண்களுக்கு இருவிரல் சோதனை நடந்ததாக உண்மைக்கு மாறான தகவலைக் கூறி வருகிறார். நானே குழந்தைத் திருமணம் செய்துள்ளேன் என்று கூறிய, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை அன்றைக்கு இருந்த ஜெயலலிதா அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன் வைக்காததால் அந்த கோயில் தீட்சிதர்கள் கையில் சென்று விட்டது. இதனால் சிதம்பரம் நடராஜர் ஆலயம் வழிபாட்டு கூடமாக இல்லாமல் வன்முறை கூடமாக மாறி உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யத் தீட்சிதர்கள் தடை விதித்து பொதுமக்களிடம் தகராறு செய்து வருகின்றனர். இதைக் கேட்ட அதிகாரிகளிடமும் தகராறு செய்கிறார்கள். எனவே தற்போது உள்ள அரசு நடராஜர் கோயிலுக்கு என்று தனி சட்டம் இயற்றி அதை கையகப்படுத்த வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ள கோயில்கள், சொத்துக்கள் மற்றும் நகைகளை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் குரல் கொடுத்து வருகிறார்கள். இது எப்படி சாத்தியம்? தனியாரிடம் கொடுத்தால், எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்?
வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்தி வெற்றி பெறுவோம். தனியார் பேருந்து விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.