திருச்சி மாவட்டம் சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய ராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இன்பராஜ் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கிள்ஸ் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேசுகையில்; தமிழகத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்காகவே CPS ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து cps என்ற பெயரில் இயக்கத்தை உருவாக்கி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் குரல் கொடுத்தும் வருகின்றோம்.
தேர்தல் சமயத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, தற்போது ஆட்சியில் இருக்கும்போது ஏதேதோ காரணம் கூறி வாக்குறுதியை நிறைவேற்ற தயங்குகிறது.
சிபிஎஸ் திட்டத்தை ஒழிப்பதற்காக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டோம். சில நாட்களுக்கு முன்னர்தான் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்தியதில், இதில் பங்கேற்ற ஊழியர்கள் பலருக்கு உடல் ரீதியாக நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
உயிரைக் கொடுத்தாவது நமது ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றியே தீருவோம். இந்தப் போராட்டத்தின் முன்னோட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி திருச்சியில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்கள் மற்றும் தொடர் வேலை நிறுத்தங்கள், இயக்க நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்க போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவதாக இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
இக்கூட்டத்தில் கௌரவ தலைவர்கள் சாயி கண்ணன், சுப்பிரமணியன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், முனியாண்டி, ஆஷிக் அலி உட்பட மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்