நமக்குள் இருக்கும் குழந்தைத்தன்மையை பிரதிபலிப்பவை கிரேசி மோகனின் படைப்புகள்

கமலோடு அவர் சேர்ந்து செய்த படங்கள் எல்லாமே சின்னச் சின்னத் தவறுகளால் ஏற்படும் நகைச்சுவை விருந்துதான்.

ஜெய்சுந்தர் டி

சில சமயங்களில், நாம் ஒருசில உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் மீது அதீத அன்பைப் பொழிந்துவிடுகிறோம். . உண்மையில், அவற்றினால் நமக்கு கிடைக்கும் பயனை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. இதை நீங்கள் நம்பவில்லை என்றால், ஒருசில பொருட்கள் அல்லது பிராண்டுகள் மூடப்படும்போது எழுதப்படும் ஏராளமான சோகக் கதைகளைப் படித்துப் பாருங்கள். அம்பாசிடர் கார் புழக்கத்தில் இருந்து நீங்கியபோது, ஏராளமான டிவீட்களைப் போட்டு தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டவர்கள் அனைவரும் அந்தக் காரை வாங்கியிருந்தால், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் உற்பத்தியையே நிறுத்தியிருக்காது.

இதேமாதிரி, ஒரு நட்சத்திரம், ஒரு நடிகர் அல்லது ஒரு திரைப் பிரபலம் காலமாகும்போது, பெரும் இழப்பு ஏற்படுகிறது. .பொருள் அல்லது பிராண்டுகளைத் தொடர்ச்சியாக வாங்குவோர் இல்லாமல் போவதால் ஏற்படுவது மாதிரியானதல்ல இந்த மறைவு. மாறாக, இங்கே காலமே தான் சமைத்த அழகிய ஓவியத்தின் ரசிகனாக மாறிவிடுவதால் ஏற்படும் முடிவு இது.

ஒரு நட்சத்திரத்தை “பிரபலம்” என்று சொல்லட்டுமா? அவரை வாழ்விலும் சாவிலும் “கொண்டாடும்” அர்த்தத்தில் அதை இங்கே பயன்படுத்துகிறேன். அப்படித்தான் பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பிரபலத்தை, நீங்க ஓரிருமுறைதான் பார்த்திருப்பீர்கள், அவரைப் பார்ப்பதற்காக முட்டிக்கொண்டு நிற்கும் பல்வேறு தலைகள் நடுவே அவர் முகமே மறைந்துபோயிருக்கும், அவரை நீங்கள் சந்தித்தே இருக்க மாட்டீர்கள், ஆனால், அவருடைய படைப்புகளை நீங்கள் எப்போதும் ரசித்துக்கொண்டே இருப்பீர்கள். உங்கள் வாழ்வின் அப்படிப்பட்ட ஒரு சிறு இழை மறைந்துபோகும்போது, ஏற்படும் இழப்பு இருக்கிறதே, அது உங்களுக்கு நெருக்கமானவர் மறைந்துபோகும்போது கூட ஏற்படாது.
அந்த நெருக்கமானவர், அணுகக்கூடியவராக இருந்திருப்பார், உதவிகரமாக, ஏன் பயன்படக்கூடியவராகக் கூட இருந்திருப்பார். ஆனால், பிரபலமானவர் உங்கள் வாழ்க்கையோடு பிணைந்திருந்தது போல் இவர் இருக்கமாட்டார். உங்கள் சின்ன வயதில் எப்படி இருந்தீர்கள்? அந்த நெருக்கமானவர் மிகவும் அன்யோன்யமானவர். அதனால், அவரது ரேஷன் அட்டையை எடுத்துக்கொண்டு அரிசி வாங்க வரிசையில் நின்றீர்களா? அல்லது அந்தப் பிரபலமானவரின் புதிய திரைப்படம் வெளியானபோது முதல் நாள் முதல் காட்சிக்காக அதைவிட மிக நீண்ட வரிசையில் நின்றீர்களா? நண்பர்கள் குறை சொன்னபோது, பக்கத்தில் இருந்த நெருக்கமானவருக்காக வக்காலத்துக்கு வாங்கியதைவிட, பிரபலத்துக்காக மோதலில் ஈடுபட்டதே அதிகமாக இருந்திருக்கும், இல்லையா? நமக்கெல்லாம் இதற்கான பதில்கள் தெரிந்தவைதான்.
நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பொறுத்தும், நமது இளமைக்காலத்தில் எத்தகைய கலைஞர்கள் நமது ரசனையை மேம்படுத்தினார்கள் என்பதைப் பொறுத்தும், இன்று நாம் ஒரு பிரபலத்தையோ, இரண்டு பிரபலங்களையோ இழந்துவிட்டோம்.

கிரிஷ் கர்னாடும், கிரேஸி மோகனும் தான் அந்தப் பிரபலங்கள். இவ்விருவர்களும் நடிகர்கள், எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள். ஆனால் இவ்விருவர்களின் படைப்புகளும் மிகவும் பரந்துபட்டவை.
கர்னாட், மகாபாரதத்தில் இருந்து யயாதியை எடுத்துக்கொண்டால், மோகனோ, கிருஷ்ணனையும் கடோத்கஜனையும் எடுத்துக்கொண்டார். அவரது கையில் அது ‘சாக்லெட்’ கிருஷ்ணாவாகவும் ‘கூகுள் கடோத்கஜனாகவும்’ மாறியது. கர்னாட் துக்ளக்கை எழுதினால், கிரேஸி மோகன் அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும் எழுதினார்.
கர்னாட், ஸ்வாமியின் கறாராக ஒழுக்கவாதி அப்பா என்றால், மோகனோ அந்த ஸ்வாமியாகவே இருந்தார். அதில் ஏராளமான கிண்டல்களும் வார்த்தை ஜாலங்களும் உண்டு.
சினிமா ஏராளமான உணர்வுகளுக்குத் தீனிபோடுவதாலோ என்னவோ, அல்லது புராணங்களில் இருந்து சோகப் பாடங்களைத் தெரிந்துகொள்வதைவிட, ஜாலியான நகைச்சுவை பிடித்திருப்பதாலோ என்னவோ, அல்லது கிரேஸி மோகன் என்னுடைய தாய்மொழியில் எழுதியதாலோ என்னவோ, என்னால் அவரை உணர்வு ரீதியாக புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், கிரிஷ் கர்னாடைவிட, மோகனுக்கு நான் பெரிய விசிறி. மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் அவரது அபாரமான சரவெடி ஜோக்குகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர் நில், கவனி, கிரேஸி மற்றும் சாக்லெட் கிருஷ்ணா நாடகங்களால் ஆச்சரியமடைந்தவன் நான்.
தமது பார்வையாளர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் கிரேஸி மோகன். எந்த ஜோக்குகள் சிரிப்பை வரவழைக்கும், எந்த பஞ்ச் வரிகள் லேசாக புன்னகைக்க வைக்கும் என்றெல்லாம் நன்கு அறிந்தவர். பார்வையாளர்களில் இருக்கும் குழந்தைகளை மனத்தில் வைத்துக்கொண்டே தாம் வசனம் எழுதுவதாக பல பேட்டிகளில் அவர் சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்குப் பிடிக்குமானால், மற்ற பார்வையாளர்களுக்கும் அது பிடித்தே ஆகவேண்டும். நம்முள்ளே அமர்ந்துகொண்டிருக்கும் குழந்தைக்கு அவரது நாடகங்கள் பிடிக்கும். அதனால் தான். அவரது நாடகங்களில் அருவருப்பான கொச்சையான ஜோக்குகள் இருப்பதில்லை.
ஒரு கலைஞர் வேலைசெய்வதைப் பார்ப்பதே பெரும் கொடுப்பினை என்று சொல்வார்கள். அந்த கொடுப்பினையையும் கிரேஸி மோகன் இன்னும் ஜனநாயகப்படுத்திவிட்டார். அவர் திரைக்கதை எழுதுவதையோ, தமது குழுவினரோடு ஒரு உத்தியைப் பகிர்ந்துகொள்வதையோ பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஒரு காட்சி உருவாவதைப் பக்கத்தில் இருந்து பார்ப்பதற்கு நீங்கள் ஒரு ஷுட்டிங்கில் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதெல்லாம் மிகவும் சகஜமாக வரும். ஒரு தொலைக்காட்சி பேட்டியிலேயே, மிகவும் இயல்பாக சிலேடைப் பேச்சோ, ஒற்றை வரிகளோ உருவாவதை உங்களால் பார்க்க முடியும். அவர் முதல் வரியைப் பேசும்போதே, அவர் கண்கள் ஒளிரும். ஒரு பஞ்ச் வரி உருவாகிவிட்டது என்பது தெரியும். அடுத்த சில கணங்களில் அது வந்து விழும். அப்படித்தான் விழுந்தது. ஒரு பேட்டியில், தாம் மயிலாப்பூரிலேயே வளர்ந்தவன் என்பதைச் சொல்லிக் கொண்டு வந்தவர், உடனே அதனை “மை லவ் அ போர்” (My Love a Pore) என்று சொல்லிவிட்டு, மாம்பலத்துக்கு போனால், தமக்கு வீட்டுநினைவு வந்துவிடும் என்று ஒரு பஞ்ச் வைத்தார்.
மயிலாப்பூர் என்றவுடன் இது ஞாபகம் வருகிறது. மோகனுக்கு மயிலாப்பூரின் சமூகச் சூழல் தெரியும், அந்தச் சிறிய குழுவினருக்குள் இருக்கும் பல்வேறு பின்னல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட மேடை நாடகங்களின் நகைச்சுவை அவருக்கு நன்கு தெரியும். ஆனந்த விகடன் இதழில் 1940களில் அட்டைப்படங்களில் ராஜுவின் ஓவியங்களோடு வந்த ஜோக்குகளாகட்டும், பின்னர் 1960களில் கோபுலுவின் கேலிச்சித்திரங்கள் ஆகட்டும், அதெல்லாம் அவரை எந்தவகையில் கூச்சம் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவற்றையெல்லாம் இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு, அந்தச் சமூகச்சூழலில் இருந்த வாழ்க்கை நகைச்சுவையை நன்கு வெளிக்கொண்டு வந்தார்.
அவர் எழுதிய திரைப்படங்களில் எல்லாம், பெண் பாத்திரங்களின் பெயர் ஒன்று மைதிலியாகவோ, அல்லது ஜானகியாகவோ இருக்கும். அது அவரது பள்ளி ஆசிரியையின் பெயர். அவர் தான், கிரேஸியை எழுத ஊக்குவித்தவர். அதேபோல், அவரது வசனங்கள் எல்லாம் பிராமணத் தமிழிலேயே இருக்கும். இவையெல்லாம் ஒரு விஷயத்தைத்தான் சொல்கின்றன. அவர் தாம் விளையாட வேண்டிய மைதானம் எதுவென்றும் தமது பார்வையாளர்கள் யார் என்றும் தெரிந்துவைத்திருந்தார். அவரது கதைக் கருக்களும், பாத்திரங்களும், வசனங்களும் மிகவும் குறுகிய ஒரு சமூகச் சூழலில் இருந்தே எடுக்கப்பட்டிருந்தாலும், அதை ரசிக்க முடிந்தது. ஒவ்வொரு ஜோக்கும் ஒரு சிக்ஸர், அதில், சாக்லெட் கிருஷ்ணா தான் மிகவும் உசத்தி. சுமார் 750 முறைகள் அது மேடையேற்றப்பட்டது.
கமல்ஹாசனோடு கிரேஸி மோகனுக்கு இருந்த உறவைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? கமல்ஹாசனின் நகைச்சுவை அனைத்துமே நாகேஷ் மற்றும் கிரேஸி மோகனின் உந்துதலால் ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை. அவரது படங்கள்! எங்கேயிருந்து தொடங்குவது!
சதி லீலாவதி முதல், சாகாவரம் பெற்ற மைக்கேல் மதனகாமராஜன் வரை, கொஞ்சம் கரடுமுரடான பம்மல் கே சம்பந்தம் முதல், பைலட் ராமாகத் தோன்றிய பஞ்சதந்திரம் வரை, அனைத்து திரைப்படங்களில், அவர் தமிழில் பேசப்பட்ட அத்தனை வட்டார வழக்குகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதை நிரூபிக்கும். கொங்கு தமிழ், பாலக்காட்டுத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், கொசைத்தமிழான சென்னை தமிழ் உள்பட அனைத்துமே அவருக்கு அத்துப்படி.
கமலோடு அவர் சேர்ந்து செய்த படங்கள் எல்லாமே சின்னச் சின்னத் தவறுகளால் ஏற்படும் நகைச்சுவை விருந்துதான். அவை அனைத்திலும் சூழ்நிலைக்கும் நேரத்துக்கும் ஏற்ப, ஜோக்குகள் இருக்கும். அவற்றை கமல்ஹாசன் மிகச் சரியாகத் திரையில் சொல்லி அசத்துவார். ஒரே ஒரு சின்ன பொய்யை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இருவரும் அடுக்கடுக்காக பல பொய்களை கட்டி எழுப்பிக்கொண்டே போவார்கள். அவை அத்தனையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவிழ்ந்து விழுந்துவிடலாம் என்று தோன்றும், ஆனால், விழாது. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவேண்டிய தருணம் வரும்போதுதான், அந்த முடிச்சே அவிழும். மேலும், அதற்கு உரிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அது தெரிய வரும். உதாரணமாக, அவ்வை சண்முகி திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், ஜெமினி கணேசன் மட்டும் அவ்வை சண்முகியின் மரணத்துக்காக துக்கப்படுவார். மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களும் அந்தச் சூழ்நிலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.
கிரேஸி மோகனின் கதாநாயகர்கள் எல்லோரும் வீரர்கள் அல்லர். அவர்கள் எல்லோரும் சாதாரணர்கள். வாழ்க்கையின் எளிய சந்தோஷங்களே அவர்களுக்குப் போதுமானவை. டென்னிசனின் வரியை ஞாபகப்படுத்தலாம் என்று யோசித்தபோது, காதலா, காதலா திரைப்படத்தில் வரும் ஒரு அபாரமான காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அதில், கமலுக்குப் பெயர் லிங்கம். ராபர்ட்சன் இறந்துவிட்டார் என்று தெரிந்து அவர் வீட்டுக்குப் போய் அவரது உறவினர்களிடம் ஒரு ஓவியத்தை விற்றுவிடலாம் என்று கமல் போவார். அங்கே இறந்தது ராபர்ட்சனின் மகன் வில்லியம்சன். அடுக்கடுக்காக நகரும் காட்சிகள் உச்சத்தைத் தொடும். கமல் தன்னை லிங்கம் என்று அறிமுகம் செய்துகொள்வார். உடனே ஒரு கிறிஸ்துவ தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணம் வர, ‘ஆபிரகாம் லிங்கன்ம்’ இதில் ‘எம்’ சைலண்ட் என்று பேசுவார். இந்தக் காட்சியைப் பார்க்கவேண்டுமானால், இங்கே சொடுக்கவும் : //youtu.be/4owA38KjYPc?t=1290.
கிரேஸி மோகனுடைய தமிழ் தான் அவரை தமிழ் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்த்தது, அதுவேதான் பிற மொழிக்காரர்களை அவரைப் புரிந்துகொள்ள முடியாமல் செய்ததும். அவரது சிலேடைகளும் ஒற்றை வரி பஞ்ச்களும், தமிழும் ஆங்கிலமும் கலந்த வார்த்தை விளையாட்டுகள். தமிழ் தெரியாத ஒருவரிடம் போய் எப்படி “எச்சகலைனா நாய் தானா? எச்சகலை சிங்கம், எச்சகலை புலி…” என்ற வசனத்தைப் புரியவைப்பது? சென்னை தமிழே தெரியாத ஒருவரிடம் போய் “நீ பேசறது கைலாசம் சிவன் மாதிரி இல்ல, ராயபுரம் சிவன் மாதிரி இருக்கு” என்பதை எப்படி விளக்குவது?
காலம் என்பது உண்மையில், குள்ள அப்பு சொல்வது மாதிரி, ‘கபட நாடக வேஷதாரி’தான். படைப்பாளுமை ஊற்றெடுக்கும் தருணத்தில்தான் காலம் அவர்களை அழைத்துச் சென்றுவிடுகிறது. கிரேஸி மோகன் இல்லாமல், இனிமேல் கமல்ஹாசன் காமெடிகள் எப்படி இருக்கும்? அவரது கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழு இனி என்ன செய்யும்? ஒரு கலைஞர் மறையும்போது, அந்த வெறுமை பார்வையாளர்களைத் தாக்கும். அதைவிட, அவரது புகழில் வாழ்ந்து வந்தவர்களுக்குத்தான் அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போது கிரேஸி மோகன் என்ன செய்துகொண்டிருப்பார்?
ஒரு பேட்டியில் கிரேஸி மோகன், “பெரிய விஷயங்கள் மிகச் சுலபமாக நடந்துவிடும், ஆனால், அது நடக்குவரை நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும்” என்றார். அவர் எங்கோ உட்கார்ந்துகொண்டு, பிரியமான வெற்றிலைச் சீவலை மென்றுகொண்டு, புதிய குழுவோடு, சாக்லெட் கிருஷ்ணாவை 800 தடவையாக மேடையேற்றுவதற்காக, புதிய சூழலுக்கும் புதிய ரசிகர்களும் ஏற்ப, வசனங்களை மாற்றி எழுதிக்கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்.

(ஜெய்சுந்தர் டி, புது தில்லியில் உள்ள வெளியுறவுத் துறையில் பணியாற்றும் ஒரு அயலுறவுத் துறை அதிகாரி.)

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close