திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் தனக்கு "காட்டுநாயக்கன்" என்ற பழங்குடியின பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க கோரி மனு ஒன்று அளித்துள்ளார். அதில் தன்னுடைய தந்தை, சகோதரி ஆகியோர் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதே சாதி சான்றிதழ் பெற்றதற்கான ஆதாரங்களையும் மகாலட்சுமி சமர்ப்பித்துள்ளார்.
ஆனாலும் மகாலட்சுமிக்கு சாதி சான்றிதழ் வழங்க வருவாய் கோட்ட அதிகாரி மறுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து மகாலட்சுமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "கல்வி மற்றும் வேலைவாய்ப்பை, விளிம்பு நிலை சமூகத்தினர் அணுகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், சாதி சான்றிதழ் தேவை. இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரரின் தந்தையும், சகோதரியும், காட்டுநாயக்கன் என்ற சாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். எனவே, மனுதாரரின் வழக்கு நியாயமானதாகவே தோன்றுகிறது.
மேல்முறையீட்டை ஒரு வருடத்துக்கு பிறகு ஆட்சியர் நிராகரித்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரியை அணுகும்படி உத்தரவிட்டிருக்கிறார். இதுபோன்ற விண்ணப்பங்களை சரிபார்த்து, சாதி சான்றிதழ் வழங்க, மத்திய அளவில் ஆன்லைன் தளத்தை ஏற்படுத்த வேண்டும். சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கவும், அவற்றை சரிபார்த்து வழங்கவும், பொது இணையத்தை ஏற்படுத்த வேண்டும்.
சொந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கும்படி சொல்லாமல், தான் வசிக்கும் மாவட்டத்திலுள்ள அதிகாரியிடம் விண்ணப்பிக்க ஏதுவாக, இந்த இணையதள வசதியை விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
விண்ணப்பித்தவரின் சாதியை சரிபார்க்கும் விதமாக, வேறு மாவட்டத்தில் அவரது பெற்றோர் வசித்தாலும், அதையும் சரிபார்க்கும் வசதியும் இணையத்தில் அமைந்திருத்தல் வேண்டும்.
சாதி சான்றிதழ் சரிபார்த்து வழங்கும் நடைமுறைக்கு, கால அட்டவணை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் தேவையின்றி தாமதம் ஏற்படாது. இந்த பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து, அரசிடம் கருத்து பெற்று தெரிவிக்க, அரசு பிளீடர் அவகாசம் கோரியிருப்பதால், இதன் விசாரணை வரும் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“