தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன : ஐகோர்ட்டில் அரசு தகவல்

2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு நிர்பயா என்ற பெயரில் பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த நிதியைப் பெற்று பெண்களின் பாதுகாப்பிற்கு சிறப்பு செயல் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. எனவே இந்த நிர்பயா நிதியின் மூலமாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல் திட்டங்களைத் தீட்ட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி. ஜி.ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் தரப்பில் காவல்துறை உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் 2016 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 11,625 புகார்கள் பெறபட்டு வழக்கு பதிவு செய்யபட்டன. அதில் 1002 வழக்குகள் விசாரணையில் உள்ளது. 5,239 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 1,922 வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை. 257 தண்டனை பெற்றுள்ளனர். 1,244 பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர். 1,961 வழக்குகள் முடிந்துவைக்கபட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 1,0677 புகார்கள் பெறபட்டு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. அதில் 2,184 வழக்குகள் விசாரணையில் உள்ளது. 3,856 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 2,682 வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 121 தண்டனை பெற்றுள்ளனர். 366 பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர். 1,468 வழக்குகள் முடிந்துவைக்கபட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 3,642 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. அதில் 2,334 வழக்குகள் காவல்துறை விசாரணையில் நிலுவையில் உள்ளது. 383 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 693 வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை. 23 குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். 11 பேர் மீதான குற்றவழக்கில் விடுதலை செய்யபட்டுள்ளனர். 180 வழக்குகள் காவல் துறை விசாரணையின் போது முடிந்துவைக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது. 948 வழக்குகள் குறைந்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக அரசின் அறிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close