5 Engineering Students arrested for Marijuana Selling: ஐதராபாத்தில் சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பொறியியல் மாணவர்கள் 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்திலுள்ள ஷம்ஷாபாத் பகுதியில் வெள்ளிக்கிழமை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு மாணவர்கள் சந்தேகப்படும்படியாக ஒரு பையை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்களுடைய பையில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த மாணவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா விற்பணையில் மேலும் 3 மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த 3 மாணவர்களையும் உடனடியாக கைது செய்தனர்.
மேலும், விசாரணையில், மாணவர்கள் ஐந்து பேர்களும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் என்றும் அவர்கள் கஞ்சாவை ஆந்திரப் பிரதேச மாநில எல்லைப் பகுதியிலுள்ள அரக்கு பகுதியிலிருந்து வாங்கி ஐதராபாத் நகரில் அதிக விலைக்கு மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
பொறியியல் படிக்கும் மாணவர்கள் இப்படி சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சம்பவம் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.