டெல்லியில் 8 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் குழந்தை, தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் 8 மாத பெண் குழந்தையை, 28 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு டெல்லி சுபாஷ் நகரில் நூற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும், தினக்கூலி தொழிலாளர் ஒருவருக்கு, சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், 8 மாத பெண் குழந்தையை அவர்கள் அருகில் இருக்கும் உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமையன்று (28.1.18) குழந்தையின் தாய், அருகில் இருந்த உறவினர் ஒருவரின் வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

மாலை வீடு திரும்பிய அவர், வீட்டில் தனது குழந்தை ரத்த வெள்ளத்தில், இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது கணவருடன் சென்று டெல்லி காவல் நிலையத்தில், புகார் அளித்தார்.

புகாரையடுத்து, தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், பெண் குழந்தையை விட்டுச் சென்ற வீட்டில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, குழந்தையின் பெற்றோருக்கு உறவினரான 28 வயது இளைஞர்,பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இளைஞரை கைது செய்ய போலீசார் அவரை டெல்லி சிறையில் அடைத்துள்ளனர். 8 மாத பெண் குழந்தை தனது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், 8 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், குழந்தைக்கு ஏற்பட்ட தீவிரமான காயங்களால், மருத்துவம்னையில் அந்த குழந்தைக்கு 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக வேதனையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து கடுமையான கருத்தை பதிவுசெய்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் குழந்தை, தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Crime News by following us on Twitter and Facebook

×Close
×Close