சென்னையில் ரயில்வேயில் பணி புரியும் பெண் ஊழியரை கொலை செய்துவிட்டு, ரயில் மூலம் வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பெரியகாவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரூக்கேஷ் (38). இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகனா(35). இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே முருகன்குடி கிராமத்தை சேர்ந்த வீராசாமி (எ) தேவேந்திரன்(32) என்பவருடன் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீராசாமி சென்னையில் உள்ள ரயில்வே கேண்டீனில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மோகனாவுக்கும் இடையேயான பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் சென்னை, பெரியமேடுவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து நேற்று முன்தினம் தங்கினர். பின்னர் மாலையில், வீராசாமி மட்டும் அவசர அவசரமாக அறையைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் முகமது (63), ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதாக அறிந்து அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால், மாற்று சாவியைக்கொண்டு அறையை திறந்து பார்த்த போது, மோகனா காயங்களுடன் தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து லாட்ஜ் மேலாளர் உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், மோகனாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய விராசாமியை வலை வீசி தேடினர். இதனைத் தொடர்ந்து, வீராசாமியை போலீசார் நேற்று காலை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு தப்பி செல்ல முயன்றபோது, அவரைக் கைது செய்தனர். மேலும், போலீசார் அவரிடம் இருந்து மோகனாவின் பணம் மற்றும் நகைகளைக் கைப்பற்றினர்.
இந்த கொலை தொடர்பாக, போலீசார் வீராசாமியிடம் நடத்திய விசாரணையில், ரயில்வேயில் வேலை பணிபுரிந்து வந்த மோகனா, அதிகாலையில் வேலைக்கு செல்வதால் காலை மற்றும் மதியம் ரயில்வே கேண்டீனில் சாப்பிடுவது வழக்கம். அப்போது, கேண்டினில் வேலை செய்த வீராசாமியிடம் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால், விடுமுறை நாட்களில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இருவரும் ஆட்டோவில் வழக்கமாக செல்லும் மெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, வீராசாமி மட்டும் வெளியே வந்து மது அருந்தியபின், கஞ்சா புகைத்துவிட்டு மீண்டும் லாட்ஜுக்கு சென்றுள்ளார். இதையடுத்து, மோகனாவுடன் வீராசாமி உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, மோகனாவுக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக கூறி வீராசாமி தகராறில் ஈடுபட்டு, மோகனாவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அவரை நிர்வாணப்படுத்தி அறையில் இருந்த மின்விசிறியில் அவரது சேலையைக் கொண்டு தூக்கில் தொங்கவிட்டு மோகனா தற்கொலை செய்துகொண்டதைப் போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்னர், மோகனா அணிந்திருந்த, 5 சவரன் தாலி செயின், ஒரு சவரன் கம்மல், மூக்குத்தி மற்றும் ரூ.2,500 பணத்தை எடுத்து கொண்டு அறையை பூட்டிவிட்டு தப்பியதாக போலீசார் விசாரணையில் வீராசாமி தெரிவித்துள்ளார்.
ரயில்வே பெண் ஊழியர் மோகனாவை கொலை செய்தது தொடர்பாக வீராசாமியைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.