கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவரது பெயர் ரபீந்திர பரிடா என்பதும், கடந்த 7 ஆண்டுகளாக கணேசபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர் கடந்த சில மாதங்களாக தான் தங்கியிருக்கும் வீட்டின் அருகே கஞ்சா விதைகளை தூவி செடி வளர்த்து வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பொட்டலங்களில் அடைத்து வைத்து விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் வேலை இல்லாத காரணத்தால் கஞ்சா விற்பனை செய்தால் வருமானம் கிடைக்கும் என்பதால் அதனை பயிரிட்டு விற்பனை செய்ய முயன்றதாகவும் விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
செய்தி: ரகுமான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“