கர்நாடாகவில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை, தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் காஜி செய்புன்னேசா மொகியுதீன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை நடத்தியது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசின் ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பளித்து, தடையை நீக்கக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழ அன்று மதுரையில் நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த வீடியோவை பார்க்கையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தணிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லா பேசுகையில், ஜார்க்கண்டில் காலை நடைபயிற்சியின் போது ‘தவறான’ தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொல்லப்பட்டார். அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி உத்தவ் ஆனந்த் மீது ஆட்டோ ரிக்ஷா மோதியது. எங்கள் சமூகத்தில் உணர்ச்சிவசப்பட்ட சிலர் இருக்கிறார்கள்.(நீதிபதிகளுக்கு ஏதாவது நேர்ந்தால், எங்களை குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பிற்காக பாஜக காத்திருக்கிறது என்றார்.
வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த டிஎன்டிஜே மதுரை மாவட்டத் தலைவர் ஹபிபுல்லா, துணைத் தலைவர் அசன் பாட்ஷா ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, தஞ்சாவூரில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து கூறிய TNTJ தலைமையக பேச்சாளர் எஸ்.ஜமால் முகமது உஸ்மானி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், கோவை ரஹமத்துல்லாவை திருநெல்வேலி அருகே மேலப்பாளையத்தில் வைத்து மதுரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இருவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
இதற்கிடையில், ஹிஜாப் தீர்ப்பை வாசித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil