Kolkata model Woman Murdered: பெங்களூருவில் கொல்கத்தாவைச் சேர்ந்த மாடலிங் பெண்ணை கொலை செய்ததாக ‘ஓலா’ கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா விமான நிலைய சுற்றுச்சுவர் அருகில் உயிரிழந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கடயரப்பனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் கையில் கைகடிகாரம் மட்டுமே இருந்தது. அவருடைய ஹேண்ட் பேக் எதுவும் அங்கே இல்லை. இதனால், உயிரிழந்தது யார் என்பது குறித்து அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உயிரிழந்தவர் அணிந்திருந்த உடையில் இருந்த குறிப்புகளைவைத்து பெங்களூரு போலீசார் டெல்லி, கொல்கத்தாவுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கே காணாமல் போனவர்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களை வைத்து உயிரிழந்தது கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங்(32) என்ற மாடலிங் மற்றும் நிகழ்சி ஏற்பாட்டாளர் பணி செய்யும் பெண் என்பதைக் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக, பெங்களூரு போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், பெங்களூருவைச் சேர்ந்த ‘ஓலா’ கார் டிரைவர் நாகேஷ் என்பவர் பூஜா சிங்கை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது அவரிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க கொலை செய்ததைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
பூஜா சிங் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக பெங்களூரு வந்துள்ளார். அப்போது அவர் ஜூலை 30 ஆம் தேதி பெங்களூரு கிரஸண்ட் சாலையில் இருந்து பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ‘ஓலா’ காரை புக் செய்துள்ளார். பிறகு, அந்த ஒலா கார் டிரைவரிடம் நாளை காலை 4 மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும் வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். மறு நாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் சென்று அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் நாகேஷ்.
அப்போது, ‘ஓலா’ கார் டிரைவர் நாகேஷ் விமான நிலையம் செல்லும் வேறு வழியாக காரை ஓட்டிச்சென்றதோடு, பூஜா சிங்கிடம் பணம் கேட்டுள்ளார். பூஜா பணம் தர மறுக்கவே நாகேஷ் காரில் இருந்த ஜாக்கி கம்பியால் தாக்கி அவரிடமிருந்த ஹேண்ட் பேக் மற்றும் பர்சை பறித்துள்ளார். ஆனால், அதில் ரூ.500 மட்டுமே பணம் இருந்துள்ளது. அதோடு 2 செல்போன்களும் இருந்துள்ளது. இதையடுத்து, பூஜா சிங்கை காட எரப்பனஹள்ளி கிராமம் அருகே கீழே தள்ளியுள்ளார். அங்கே நினைவு திரும்பிய பூஜா தப்பிக்க முயன்றபோது நாகேஷ் கற்களாலும் கத்தியாலும் தாக்கி அவரை கொலை செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பூஜா சிங்கை கொலை செய்த ‘ஓலா’ கார் டிரைவர் நாகேஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், இரவு நேரங்களில் கேப் கார்களில் பயணிகள் தனியாக செல்ல வேண்டாம் என்றும் தனியாக நீங்களாகவே கார்களை புக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கேப் கார்களில் தனியாக செல்லும் பயனிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.