Minor Girls rescued from prostitution in Chennai: சென்னையில் இரண்டு சிறுமிகளை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய 24 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசார் அங்கே இருந்த சிறுமிகளை மீட்டனர். அதில், ஒரு சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
வட சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய இந்து (24) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசார் அங்கே இருந்த சிறுமிகளை மீட்டனர். அதில், ஒரு சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. சிறுமிகளை வலுக்கட்டயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்து என்ற பெண், 2017 ஆம் ஆண்டு, 15 வயது சிறுமியுடன் முதலில் நட்பாக அணுகியுள்ளார். இந்த சிறுமியின் தாயார் இறந்துவிட்டதால் அவருடைய தந்தை சிறுமியை கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், ஆதரவற்ற நிலையில் சென்னையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுமி அழுதுகொண்டே நின்றிருந்துள்ளார். அப்போது, அங்கே சென்ற இந்து சிறுமியின் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுமிக்கு ஏதேனும் வேலை வாங்கி கொடுத்து உதவுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியை இந்து தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு, அங்கே அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனால், சிறுமி தற்போது 7 மாத கர்ப்பினியாக உள்ளார்.
இந்துவின் வீட்டுக்கு பெரும்பாலும் கொள்ளை, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆண்கள் சென்றுள்ளனர். அவர்களில் ஒரு சங்கிலி பறிப்பு பேர்வழி இந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். அந்த நபர் சிறுமியை கடத்திச் சென்று, பின்னர், மீண்டும் இந்துவின் வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி மீண்டும் இந்துவின் வீட்டுக்கு வந்த பிறகு, அவர் கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
சமீபத்தில் ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் பாலியல் தொழில் நடப்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக இந்துவின் வீட்டை சோதனை செய்தனர். அங்கே இந்துவால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு சிறுமிகளை மீட்டனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட சில பெண்களை போலீசார் மீட்டனர். அந்த பெண்களை இந்து தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்து அவர்களை ஹோட்டல்களுக்கும் வீடுகளுக்கும் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வந்துள்ளார்.
போலீசாரால் மீட்கப்பப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த வீட்டில் இருந்த பெண்கள் தப்பித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார், அந்த வீட்டுக்கு யார் சென்றார்கள்? சிறுமிகளை பாலியல் வண்புணர்வு செய்த நபர்கள் யார் என்பதை விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.