பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜார்க்கண்ட் முன்னாள் காவல் அதிகாரி உள்பட மூவர் வியாழக்கிழமை (ஜூலை14) கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், ஜார்க்கண்ட் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் முகம்மது ஜலாலுதீன், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பான சிமி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் அக்தர் பர்வேஷ் மற்றும் அர்மன் மாலிக் ஆகியோர் ஆவார்கள்.
இவர்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கும் நபர்களை குறிவைத்து வந்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய பாட்னா மூத்த காவல் கண்காணிப்பாளர் மனவிஜிட் சிங் தில்லன், ‘இவர்கள் மதரஸா மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா போன்று இஸ்லாமியர்களுக்கு உடற்பயிற்சிகள் வழங்கியுள்ளனர். மேலும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் கர்நாடகாவிலும் உள்ளனர்” என்றனர். இந்த நிலையில், மூத்த காவல் கண்காணிப்பாளரின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவர் மீது குற்றச் சதி (120-பி), மாநில அரசுக்கு எதிராக போராட்டம் (121-ஏ), இரு தரப்புக்கு இடையே பகைமையை தூண்டுதல் (153பி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புல்வாரி ஷெரீப் காவல் நிலைய பொறுப்பாளர் இக்பால் அஹமது, “பிரதமரின் பாட்னா வருகைக்கு முன்னரும் பாட்னாவில் வீடு வாடகைக்கு எடுத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதிகளில் உள்ள நபர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். கடைசியாக ஜூலை 7ஆம் தேதி கூட்டம் நடத்தியுள்ளனர்” என்றார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த நோட்டீசும் கைப்பற்றப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயலர் முகம்மது ஷகீப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், போலி ஆவணங்களை திரட்டி பயங்கரவாத முத்திரை குத்த முயலுவதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், ‘பாட்னா மூத்த காவல் கண்காணிப்பாளர் மனஜித் சிங் தில்லன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆர்எஸ்எஸ் ஷாகாவுடன் அவர் ஒப்பிட்டு பேசியது வாய்தவறி வந்திருக்க வாய்ப்பில்லை” எனக் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து மகாராஷ்ரா மற்றும் ராஜஸ்தானில் வன்முறைகள் நடைபெற்றன. உதய்பூரில் நுபுர் சர்மா கருத்தை பகிர்ந்த தையல்காரர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.