Two B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பேருந்து நிறுத்தம் அருகில் வெள்ளிக்கிழமை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 2 இளைஞர்களை விசாரித்த போலீசார் இளைஞர்கள் தங்கள் பையில் பாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்னர். அவர்களிடம் இருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
போலீசாரின் விசாரணையில், அவர்கள் ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த பிரவீன்(21) மற்றும் காக்கிநாடாவைச் சேர்ந்த சாய்ராம்(21) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் கஞ்சாவை கடத்தி கல்லூரியில் சக மாணவர்களுக்கு விற்பனை செய்துவந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரவீன், சாய்ராம் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒரு கஞ்சா வியாபாரியிடம் 2 கிலோ கஞ்சாவை ரூ.15,000-க்கு வாங்கிக்கொண்டு திருப்பதிக்கு போவதற்காக காத்திருந்துள்ளனர். அப்போதுதான் இவர்களை பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த இளைஞர்களின் அறையை சோதனை செய்த போலீசார் கஞ்சா புகைப்பதற்கான கருவிகளையும் அவர்கள் சில மாணவர்களை கஞ்சா புகைப்பதை ஊக்குவித்துள்ளனர் என்பதும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, கஞ்சா கடத்திய இருவரையும் போதைபொருள் தடுப்பு பிரிவு சிஐடி போலீசார் முறையாக கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.