Advertisment

ரவுடியிசம், சட்டத்தை மீறுதல்: இந்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை போகக் கூடாது- நீதிபதி நிர்மல்குமார்

போக்சோ வழக்குகளில் அதிக கவனம் கொண்டு கையாள வேண்டும். இந்த வழக்குகளில் முத்தரப்பும் முறையாக செயல்படவேண்டும். கவனமாக இருந்தால் தவறு செய்யாத நபர்கள் தண்டிக்கப்படும் நிலை இருக்காது- நீதிபதி

author-image
WebDesk
New Update
Advocates association.jpg

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (செப்.8) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,  இந்த சமூகத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஆலமரம் போன்றவர்கள். ஆலமரத்தில் வந்து அமரும் பறவைகள் பல நல்ல விஷயங்களை தெரிந்து கற்றுக்கொள்ளும். இதேபோலத்தான் மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெறும் இளம் வழக்கறிஞர்கள் இந்த தொழிலில் உள்ள மதி நுட்பங்கள், நேர்மையை கட்டாயம் கற்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் சங்கத்தில் சிவில், குற்றவியல், மாவட்டம், தாலுகா, பெண் வழக்கறிஞர்கள் சங்கம் என வழக்கறிஞர்களுக்காக பல்வேறு சங்கங்கள் இருக்கலாம். அந்தந்தத்துறை பகுதிகளுக்காக பிரத்யேகமாக அந்தந்த சங்கங்கள் உள்ளன.  

Advertisment

ஆனால், வழக்கறிஞர் சமுதாயம் என்றால் ஒன்றுதான் என அனைத்து சங்கங்களுமே ஒற்றுமையுடன் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் கோரிக்கைகளை தனித்தனியாக முன் வைக்காமல், கூட்டாக சேர்ந்து குரல் கொடுக்கும்போது தான் கோரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் வலிமை பெறும். அப்போது கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேறும், நிறைவேற்றப்படும். எந்த தொழிலிலும் இல்லாத திருப்தி வழக்கறிஞர் தொழிலில் மட்டுமே இருக்கின்றது. வழக்கறிஞர்கள் தங்களிடம் நீதிவேண்டி வருபவர்களுக்கு நேர்மையை சொல்லிக்கொடுங்கள். வழக்கின் உண்மைத் தன்மையை உணருங்கள். வழக்கின் உண்மையை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே நீங்கள் வழக்கை நேர்மையாக கொண்டு சென்று வாதிட முடியும். கடினமாக நேர்மையாக உழைக்கும் வழக்கறிஞர்கள் மீதுதான் நீதிபதிகளுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும். 

பார் கவுன்சில் உறுதியாக இருக்கவேண்டும்

அதேநேரம், போலி வழக்கறிஞர்களை கண்டறிந்து அவர்களது பதிவை ரத்து செய்வதை போன்று, விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், பொதுச் சொத்துக்களை ஆக்கிரமித்தல், ரவுடியிசம், சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்கக்கூடாது. 5% வழக்கறிஞர்கள் தவறு செய்யும்போது மீதமுள்ள 95% வழக்கறிஞர்களுக்கும் அது அவப்பெயரை ஏற்படுத்தும். இளம் வழக்கறிஞர்களை வழிநடத்துவதிலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை தண்டிப்பதிலும் பார்கவுன்சில் உறுதியாக இருக்கவேண்டும். நான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும், முதலில் நானும் ஒரு வழக்கறிஞர்தான். எனவே, எப்போதும், வழக்கறிஞர்களுக்கான உரிமைக்கு துணை நிற்பேன். அதேநேரத்தில் சட்ட விதிகளை மீறுவோர் யாரையும் அனுமதிக்க முடியாது. டிஜிட்டல் மயம், ஆன்-லைன் நடவடிக்கைகளால் வழக்கறிஞர்களுக்கு வருங்காலம் பெரும் சவாலாக இருக்கும். எனவே, வழக்கறிஞர்கள் யாவரும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பாக இளம் வழக்கறிஞர்களுக்கு நடுவர் நீதிமன்றங்கள்தான் கற்பதற்கான களமாகும். அத்தகைய நீதிமன்றங்களில் வரும் ஒவ்வொரு மனுக்கள் மற்றும் வழக்குகளையும் கவனமாக ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு பேசுகையில், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.  இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். 

போக்சோ வழக்குகளில் அதிக கவனம்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி முரளிசங்கர் பேசுகையில், நீதிமன்றத்திற்கு வரும் போக்ஸோ வழக்குகளில் முத்தரப்பும் முறையாக செயல்படவேண்டும். அரசு தரப்பு, எதிர் தரப்பு, நீதிமன்றம் என முத்தரப்பும் மிகவும் கவனமாக இருந்தால் தவறு செய்யாத நபர்கள் தண்டிக்கப்படும் நிலை இருக்காது. நீதித்துறை மிகவும் முக்கியமானது. வழக்குப்பதிவு செய்து பின்னர் அவர் குற்றமற்றவர் எனத் தெரிந்து விடுதலையானால், அவர் இழந்தவற்றை மீண்டும் எப்போதும் பெறமுடியாது. 

உயரிய பண்பும், சமூக அக்கறையும் கொண்டது. நீதிமன்றத்தின் கையில் மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. இங்கு வழக்குகள், தீர்ப்புகள் மூலம் தனிமனித சுதந்திரம் பறிபோகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பார்கவுன்சில் இளம் வழக்கறிஞர்கள் மூத்தவர்களின் அனுபவங்களை நேரடியாக பெற்று பணியாற்ற வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவமும், சட்டமும் தினம்தோறும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது. எந்தத் தொழிலுக்கும் இல்லாத புனிதம் இந்தத் தொழில்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து வழக்கறிஞர்கள் தங்களது பணிகளை பிறருக்கு முன் உதாரணமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 46-ம் ஆண்டு ஆண்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் சேர்மன் அமல்ராஜ், இணை தலைவர் மாறப்பன், நிர்வாகக்குழு சேர்மன் பிரிசில்லா பாண்டியன், துணைத்தலைவர் கார்த்திகேயன், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் பொருளாளர் கிஷோர்குமார், மூத்த வழக்கறிஞர் மார்ட்டின், அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன், திருச்சி பார் அசோசியேசன் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், மகளிர் பார் அசோசியேசன் தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் ஜெயந்திராணி, சிட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் புஷ்பராஜ், செயலாளர் முத்துமாரி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலை வகித்தனர். 

திருச்சியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு திருச்சிக்கு பெருமை சேர்த்த மூத்த வழக்கறிஞர் ஸ்டேனிஸ்லாஸ் உயர்நீதிமன்ற நீதிபதிகளால் கௌரவிக்கப்பட்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   முன்னதாக, திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையுரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் வெங்கட் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பிரபு நன்றி கூறினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment