தமிழ்நாட்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளை பார்க்கலாம்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
பட்ஜெட் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான எந்தத் திட்டமும் இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம் பெறாதது அவர்களை கவலையடையச் செய்துள்ளது.
தமிழக அரசு நடப்பாண்டில் ரூ.1,43,197 கோடி மொத்தக்கடன் வாங்க முடிவு செய்திருக்கிறது. அதையும் சேர்த்தால், தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.7,26,028 கோடியாக உயரும். அதாவது ஒவ்வொருவர் பெயரிலும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் கடன் இருக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் இது ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கும். 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,81,182.22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.50,000 கோடி மது வணிகத்தின் மூலமாக கிடைக்கும் என்பது தமிழகத்தின் வலுவற்ற பொருளாதார கட்டமைப்பையே காட்டுகிறது.
இத்தகைய குறைகளை களைந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அதிக எண்ணிக்கையில் செயல்படுத்தவும், நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் மகளிருக்கு ரூ.1000 அறிவிக்கும் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை மருத்துவர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
டி.டி.வி. தினகரன்</strong>
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை.
தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் எனத் தெரிவித்து விட்டு தற்போது தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சிப்காட் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன. அம்மா உணவகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மொத்தத்தில் இது விடியா அரசின் விளம்பர பட்ஜெட் எனக் கூறியுள்ளார்.
ச.ம.க. தலைவர் சரத் குமார்
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், “மகளிர் உரிமைத் தொகை மற்றும் பத்திரப் பதிவு கட்டணம் குறைப்பு 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பது வரவேற்கதக்கது.
எனினும் மது விற்பனை குறைப்பு குறித்து பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த எந்தத் திட்டமும் இல்லை.
எனவே கவர்ச்சிகர இலவச திட்டங்களை கைவிட்டுவிட்டு மாநிலத்தை முன்னேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/