அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் பிஜேபியை விமர்சித்து கவிதையொன்று கடந்த 11ம் தேதி வெளியானது. இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நமது எம்.ஜி.ஆர் நாளேட்டின் ஆசிரியர் மருது அழகுராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ் ஒரு அணியாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள். 14ம் தேதி மதுரை மேலூரில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தி, டிடிவி தினகரன் தனது பலத்தை நிருப்பித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரையில் டிடிவி தினகரன் தலைமையிலான அணியில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வந்தார். தேர்தலுக்கு பின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குச் சென்ற அவரை கைது செய்தார்கள்.
சிறையில் இருந்து திரும்பிய டிடிவி தினகரன், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் இரு அணிகளும் இணைய வேண்டும். அப்படி இணையாதபட்சத்தில் கட்சியைக் காப்பாற்ற தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். சொன்னபடியே 5ம் தேதியில் கட்சிக்கு புது நிர்வாகிகளை நியமித்தார். இது எடப்பாடி அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 10ம் தேதி தலைமை கழகத்தில் எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, டிடிவி தினகரன், கழகத்தின் துணைப் பொது செயலாளராக நியமித்ததே செல்லாது. எனவே அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியும் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், காவிக்கு அடி... கழகத்தை அழி என்ற தலைப்பில் கவிதை வெளியானது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கவிதையில் அதிமுக மூன்றாக பிளவு படவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படவும் பிஜேபியே காரணம் என்று சொல்லியிருந்தது.
இந்த கவிதையை நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் ஆசிரியர் மருது அழகுராஜ் தான், சித்திரகுப்தன் என்ற பெயரில் எழுதியிருந்தார். கடந்த 9 ஆண்டுகளாக நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் பதவியில் இருந்து வந்த மருது அழகுராஜ், சித்திர குப்தன் என்ற பெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். பல கவிதைகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது அவர் எழுதிய கவிதை டிடிவி தினகரன் அணியின் நிலைப்பாட்டை சொல்வதாக அரசியல் அரங்கில் சொல்லப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் செயல்பட முடிவெடுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் 14ம் தேதி காலை மதுரையில் பேட்டியளித்த டிடிவி தினகரனிடம் இந்த கவிதை பற்றி கேட்கப்பட்டது. அப்போது, ‘அம்மா அவர்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட பலர் இன்னமும் நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றி வருகிறார்கள். சில கருப்பு ஆடுகள் இது போன்ற தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று சொன்னார்.
இந்நிலையில் ஆசிரியர் மருது அழகுராஜை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை நடந்து கொண்டு இருந்த போது, முதல்வர், அமைச்சர்கள் பேச்சுக்கள், அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என டிடிவி தினகரன் சொல்லியுள்ளார். அப்போது அதற்கு மாற்றுக் கருத்தை மருது அழகுராஜ் சொன்னாராம். அப்போதிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. அவரை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அவர்கள் இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.