கூடுவாஞ்சேரியில் வெள்ளத்தில் வந்த முதலை? பரபரப்பு வீடியோ
கனமழை காரணமாக சென்னை, கூடுவாஞ்சேரியில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வெள்ள நீரில் முதலை ஒன்று வட்டமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் மட்டும் அல்லாமல் அதன் புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
Advertisment
சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படும் சில குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உடன் மீன், பூரான், அட்டைப் பூச்சி போன்ற உயிரினங்கள் உள்ளே வந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, கூடுவாஞ்சேரியில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வெள்ள நீரில் முதலை ஒன்று வட்டமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்மழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சென்னை கூடுவாஞ்சேரியில் ஜி.எஸ்.டி சாலையில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அங்கே சாலையில் ஒரு முதலை வெள்ள நீரில் வட்டமடிக்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பான சாலையில், வெள்ள நீரில் முதலை வட்டமடிப்பது போன்ற வீடியோ அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும் வாகன ஓட்டிகள் மத்தியிலும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
கூடுவாஞ்ச்சேரியில் ஜி.எஸ்.டி சாலையில் வெள்ள நீரில் முதலை வட்டமடிக்கிற வீடியோ வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் வி. கருணா பிரியாவின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர் உடனடியாக வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களை அனுப்பி முதலையைப் பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து வீடியோவில் முதலை இடம்பெற்ற கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் முதலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், முதலை பிடிபடவில்லை. மேலும், அந்த வீடியோவில் முதலை தெளிவாகத் தெரியவில்லை. அது முதலைதானா என்ற சந்தேகமும் எழுகிறது.
இருப்பினும், கூடுவாஞ்சேரியில் வெள்ள நீரில் முதலை வந்துவிட்டது என்ற வீடியோ பரவியதால் அச்சத்துடனும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"