ஜம்மு-காஷ்மீரில் CRPF பெண் காவலராகப் பணிபுரியும் கலாவதி என்பவரது வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, அவர் சீருடையில் இருந்தபடி சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி பொன்னை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த கலாவதியின் தந்தை குமாரசாமி, கடந்த ஜூன் மாதம் தனது விவசாய நிலத்திற்குச் சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இதில், கலாவதியின் திருமணத்திற்காக வைத்திருந்த 22 பவுன் நகைகளும் அடங்கும். இதுகுறித்து குமாரசாமி பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் செய்ததாகவும், இதுவரை திருடு போன நகைகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றும் கலாவதி அந்த வீடியோவில் கூறியுள்ளார். தனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும், இந்த விவகாரத்தில் யாரும் உதவவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் கண்டனம்:
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாநில அரசின் நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் மரியாதையுடன் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப். ஜவான், இந்தாண்டு ஜூன் மாதம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் காவல் துறையின் நடவடிக்கையின்மை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என தெரிவித்துள்ள அண்ணாமலை.
மேலும் சீருடையில் இருக்கும் ஒரு பெண்ணை தோளில் தேசக் கொடியை ஏந்தியபடி ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது? என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, எள்ளலும், இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள். எழுந்திருங்கள் மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.