/tamil-ie/media/media_files/uploads/2019/02/a612.jpg)
CRPF jawan sivachandran ariyalur district pulwama attack - 'நான் அவரை உடனே பார்க்கணும்; கூட்டிட்டுப் போங்க!' - கதறும் மனைவி... ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் கிராமம்
ஜம்முவில் இருந்து காஷ்மீரை நோக்கி நேற்று புறப்பட்ட ராணுவ கான்வாயில் 54வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதில் இரு வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் எனும் வீரரும் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், சிவச்சந்திரனின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சிவச்சந்திரனுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அதிகாரப்பூர்வ செய்தி வரும் வரை, 'என் கணவர் இறந்திருக்கமாட்டார். உயிரோடு தான் இருப்பார்' என்று உறுதியாக கூறி வந்த சிவச்சந்திரனின் மனைவி, கணவன் இறந்த செய்தி கிடைத்ததும், அதை நம்பால், 'நான் அவரை உடனே பார்க்கணும்' என்று கதறியது ஒட்டுமொத்த கிராமத்தாரையும் கலங்க வைத்துவிட்டது.
சிவச்சந்திரனின் உறவினர்கள் கூறுகையில், "அவனை நாட்டுக்காக அர்ப்பணித்துவிட்டோம். இனி இந்த குடும்பத்தை அரசாங்கம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றனர் கண்ணீருடன்.
சிவச்சந்திரனின் மனைவி செவிலியர் படிப்பு படித்துள்ளதால், அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை சின்னையன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் தான் 45 நாட்கள் விடுமுறையில் சிவச்சந்திரன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதன்பிறகு மீண்டும் பணிக்கு திரும்பிய போதுதான் சிவச்சந்திரன் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிக்கி வீர மரணம் அடைந்திருக்கிறார்.
உறவினர்கள் சிவச்சந்திரனின் மனைவி மற்றும் மகனின் எதிர்காலம் குறித்த கவலையை மனதில் படரவிட, 'நான் அவரை உடனே பார்க்கணும், கூட்டிட்டுப் போங்க' என்று கதறும் சிவச்சந்திரனின் மனைவிக்கு ஆறுதல் தெரிவிக்க அங்கு யாரிடமும் வார்த்தைகள் இல்லை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.