/indian-express-tamil/media/media_files/2025/10/07/cuddalore-kidnapping-case-2025-10-07-07-59-07.jpg)
ரூ.1 கோடி கேட்டு கணக்காளர் கடத்தல்: மகனின் நண்பரே சதி; 38 பவுன் தங்கத்துடன் 4 பேர் கைது – கடலூரில் அதிர்ச்சி
கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சங்கரன்தெருவைச் சேர்ந்தவர் பூவராகவன் (வயது 62). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிகிறார். சம்பவத்தன்று, பூவராகவன் தனது மோட்டார் சைக்கிளில் சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொளசூரை அடைந்தபோது, ஒரு காரில் வந்த மற்றொரு கும்பலும், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவரும் சேர்ந்து பூவராகவனை வழிமறித்து காரில் கடத்திச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, கடத்தல் கும்பல் பூவராகவனின் மகன் அரிஷ்கேசவை தொடர்புகொண்டு, "உன் தந்தையைக் கடத்திவிட்டோம். ஒரு கோடி ரூபாய் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்று மிரட்டியது.
அரிஷ்கேசவ் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததால், கடத்தல் கும்பல் பூவராகவனைத் தாக்கியுள்ளது. இதனால் பயந்துபோன அரிஷ்கேசவ், வங்கி லாக்கரில் இருந்த 38 பவுன் தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு, கடத்தல் கும்பல் கூறியபடி குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்குச் சென்று ஒப்படைத்தார். தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொண்ட கும்பல், பூவராகவனை அரிஷ்கேசவிடம் ஒப்படைத்துவிட்டுத் தப்பிச் சென்றது.
தந்தையை மீட்ட மகிழ்ச்சியில் அரிஷ்கேசவ் இருந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பூவராகவன் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னல் மற்றும் எண்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கடலூர், தானம்நகரைச் சேர்ந்த அஜித் (24), சுனாமி நகர் சதீஷ்குமார் (40), நாணமேடு வினோத்ராஜ் (34), சலங்கை நகர் ரேணுகா (40) மற்றும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மேலும் சிலர் எனத் தெரியவந்தது. இதில், முதல் குற்றவாளியான அஜித், பூவராகவனின் மகன் அரிஷ்கேசவின் நெருங்கிய நண்பர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அஜித், அரிஷ்கேசவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது, அங்கு அதிகப் பணப் புழக்கம் இருப்பதைக் கவனித்துள்ளார். மேலும், பூவராகவன் நிலத்தை விற்ற பணத்தில் தங்கக் கட்டிகளை வாங்கி வங்கி லாக்கரில் வைத்திருந்த விவரத்தையும் அஜித் தெரிந்து வைத்துள்ளார். அந்தப் பணத்தைப் பறிக்கவே தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜித் இந்தக் கடத்தல் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.
திட்டத்தை செயல்படுத்தியபின், அஜித் எதுவுமே தெரியாதவர் போல அரிஷ்கேசவுடன் இருந்துள்ளார். வங்கி லாக்கரில் இருந்து தங்க கட்டிகளை எடுப்பது, கடத்தல் கும்பலிடம் கொடுப்பது என அனைத்துச் செயல்களிலும் உடனிருந்து, இங்கு நடக்கும் விவரங்களை அவ்வப்போது கடத்தல் கும்பலுக்குத் தெரியப்படுத்தியும் வந்துள்ளார். காவல்துறையின் தீவிர விசாரணையில் அஜித் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து, பூவராகவனைக் கடத்திய சதீஷ்குமார், அஜித், வினோத்ராஜ், மற்றும் ரேணுகா ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கக் கட்டிகளும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.