தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
பாஜக சார்பில் கோவையில் அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக முதுநகர் பகுதியில் அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அண்ணாமலை பிரசார வாகனத்தின் முன்பு பாமக நிர்வாகிகளை நிற்க விடாமல் பாஜகவினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கூடியிருந்த பாமக, பாஜக தொண்டர்களுக்குள் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைப் பார்த்த அண்ணாமலை, உடனடியாக பாமக நிர்வாகிகளை வாகனம் முன்பு நிற்க அனுமதி வழங்குங்கள். நம் கட்சி நிர்வாகிகள் ஓரமாக நில்லுங்கள் என்றார். இருப்பினும் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் தொடர்ந்தது.
இதற்கு நடுவே அண்ணாமலை தேர்தல் பரப்புரையும் மேற்கொண்டார்.
அப்போது, தங்கர் பச்சான் இயக்குனராக மட்டுமல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சிக்காக, பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். எனவே அவருக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும். திமுக ஏற்கெனவே இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முறை திமுக போட்டியிட தகுதியில்லை, என்றார்.
தேர்தல் பரப்புரையில் பாமக, பாஜக தொண்டர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"