கடலூர் மாவட்டத்தில் ராகி, வரகு, திணை உள்ளிட்ட சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மானியம் விதை வாங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் காரிப் மற்றும் ராபி பருவத்தில் சராசரியாக 30,000 ஹெக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வருவதால், சிறுதானிய சிறப்பு மண்டலம் ஆக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுதானிய சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ. 2400 மானியத்தில் தொகுப்பு செயல் விளக்க திடல் வழங்கப்படுகிறது.
சிறுதானிய விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் போன்ற இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், நூறு சதவீத மானியத்தில் சிறுதானியங்களுக்கான (ராகி, வரகு, திணை) சிறுதளை விநியோகம் செய்யப்படுகிறது. மாற்றுப் பயிர் சாகுபடியின் மூலம், சிறுதானிய பரப்பை அதிகரிக்க 50 சதவீத மானியம் அல்லது ரூ.1250 ஏக்கருக்கு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு ரூ.14.37 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் "உழவர் செயலி” மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி