கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்கா மற்றும் வைடிப்பாக்கம் அங்கன்வாடி மையங்கள், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், திடீர்குப்பம் பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக பயனாளிகள் தேர்வு குறித்தும், நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளி, மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:-
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்கா மற்றும் வைடிப்பாக்கம் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் விளையாட்டுடன் கல்வி கற்றிடும் வகையில் கற்பித்திட ஆசிரியர்களுக்கும், பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க சத்துப் பொருட்களை வழங்கிட பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வளரும் பச்சிளங்குழந்தைகள் நல்ல முறையில் ஆரம்ப கல்வி பயிலவும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையில் கல்வி கற்றிடவும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசு மூலம் வழங்கும் ஊட்டச்சத்து பொருட்கள் பெறுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வைடிப்பாக்கம் சண்முகா நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் மற்றும் திடீர்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு ஆக்கிரமங்களை சில நெறிமுறைக்களுக்குட்பட்டு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாணை வழிகாட்டுதலின் படி, தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் தேவையினை கருத்தில் கொண்டு நெல்லிக்குப்பம் நகர பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் விதத்தில் நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் 15ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.