ரத்ததானம் வழங்கி பிற உயிர்களை காப்பாற்றும் மகத்தான சேவையில் நமது காவல்துறையின் பங்களிப்பு இன்றியமையாதாக இருக்க வேண்டும் என கடலூர் எஸ்பி இராஜாராம் கூறினார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் கடலூர் காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், உயிர் காக்கும் வாய்ப்பு எல்லாம் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை. அதனால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உறுப்பு தானங்கள் இறந்த பிறகு தான் கொடுக்க முடியும். ஆனால் நாம் உயிரோடு இருக்கும் போதே கொடுப்பது ரத்ததானம் மட்டுமே. அதனால் நாம் அனைவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரத்ததானம் அளிக்க வேண்டும்.
மேலும் ரத்த தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்கள் அனைவரிடமும் சரியான புரிதல் உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சென்று பார்த்தாலே, ரத்த தானத்தின் மகத்துவம் நமக்கு புரியும். எனவே ரத்ததானம் வழங்கி பிற உயிர்களை காப்பாற்றும் மகத்தான சேவையில் நமது காவல்துறையின் பங்களிப்பு இன்றியமையாதாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா, மாவட்ட குருதி பரிமாற்ற குழு அலுவலர் டாக்டர் குமார், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், டாக்டர். வினோத், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகம்மது நிசார், செய்தி தொடர்பு அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“