முந்திரி ஆலை கொலைவழக்கு; கடலூர் திமுக எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்

Cuddalore DMK MP Ramesh surrender in court for killing case: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு; பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் கடலூர் திமுக எம்.பி ரமேஷ்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் கடலூர் திமுக எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 55 வயதான கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பாமக-வைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கோவிந்தராசு, மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாக காடாம்புலியூர் போலீஸில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் பா.ம.க.வினரும் சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் சிபிசிஐடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான கடலூர் சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட சிபிசிஐடி போலீசாரும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் காடம்புலியூர் காவல்நிலையம் மற்றும் முந்திரி தொழிற்சாலையில் தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில், கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து கோவிந்தராசுவின் சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ்(31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ்(31), வினோத்(31), கந்தவேல்(49) ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 4 பேரும் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திமுக எம்.பி. ரமேஷ் தலைமறைவான நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில்  இன்று கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார். பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இந்த நிலையில் எம்.பி ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூப்பிபேன் என்றும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cuddalore dmk mp ramesh surrender in court for killing case

Next Story
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைதுYouTuber Saattai Duraimurugan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X