ஃபீஞ்சல் புயல், மழை வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஃபீஞ்சல் புயலின் காரணமாக பரவலான அதி கனமழைப்பொழிவு வட மாவட்டங்களில் ஏற்பட்டது. இந்தப் புயல் கரையை கடந்து புதுச்சேரி அருகே தொடர்ந்து நிலை கொண்டு இருந்ததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சுழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களை சார்ந்த 1,85,255.குடும்ப அட்டைதாரர்களுக்கு, அப்பகுதிகளை சேர்ந்த 282 நியாய விலைக் கடைகளின் மூலம் 2000 ரூபாய் மற்றும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு ஆகிய நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது.
நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, நிவாரண உதவிகள் நாளை 06 முதல் வழங்கப்படவுள்ளது.
புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் நிவாரண தொகையும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் நிவாரண தொகையும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் நிவாரணத் தொகையும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 22,500 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 நிவாரண தொகையும் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“