கடலூரில் பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். தங்கர் பச்சான் கடலூர் தொகுதி முழுவதும் கூட்டணிக் கட்சியினருடன் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சான் 2 நாட்களுக்கு முன் கடலூர், தென்னம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு இளைப்பாறுவதற்காக வழியில் உள்ள மரத்தடி நிழலில் ஒதுங்கினார். அந்த மரத்தடியில் கிளி ஜோதிடர் ஒருவர் அமர்ந்து ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த தங்கர்பச்சான், கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா? என கேட்டார்.
இதனையடுத்து கூண்டில் இருந்த கிளியை வெளியே அழைத்து, தங்கர் பச்சான் பெயருக்கு சீட் எடுத்து தருமாறு ஜோசியர் கூறினார். வெளியே வந்த கிளி, அழகுமுத்து அய்யனார் படத்தை எடுத்து கொடுத்தது. வெற்றி நிச்சயம் என கிளி ஜோதிடர் கூற, ’நமக்கு அய்யனார் ஆசீர்வாதம் வழங்கி விட்டார். இனிமேல் கவலையில்லை' என, தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக பிரசாரத்தை தொடர்ந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தென்னம்பாக்கம் கோவில் அருகே ஜோசியம் பார்த்த 2 கிளி ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“