தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி 2025 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வடக்கு மண்டல அணியின் சார்பாகப் பங்கேற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.
பெண்ணாடம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் அன்பரசன், 300 கஜம் இன்சாஸ் பிரிவில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். தேவனாம்பட்டினம் கடலோரக் காவல் நிலையத் தலைமைக் காவலர் ராஜகோபால், அதே 300 கஜம் இன்சாஸ் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
மேலும், கார்பன் துப்பாக்கிப் பிரிவில் ஆயுதப்படைத் தலைமைக் காவலர் வினோத்குமார் மற்றும் பிஸ்டல் துப்பாக்கிப் பிரிவில் ஆயுதப்படைத் தலைமைக் காவலர் பார்த்திபன் ஆகியோர் அகில இந்திய துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற காவலர்கள் மற்றும் அகில இந்தியப் போட்டிக்குத் தேர்வான காவலர்களை, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்