பேருந்தில் கிடந்த நகைப்பையை போலீசாரிடம் அளித்து, உரியவரிடம் ஒப்படைக்க உதவிய கடலூர் பெண்ணின் நேர்மையை குறிஞ்சிபாடி போலீசார் பாராட்டினார்.
நெய்வேலி ஜெயராம் நகர் நூர்முகமது என்பவரது மனைவி யாஷிகாபானு தனது தாய் வீடான திண்டுக்கல் சென்று விட்டு, திருச்சியிலிருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதிகாலை சுமார் 3.45 மணிக்கு பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்கு சென்ற யாஷிகாபானுக்கு, தான் கொண்டு வந்த கைப்பையை எடுக்காமல் வந்தது ஞாபகம் வந்தது. அந்த கைப்பையில் 5 1/2 பவுன் நகைகள் இருந்தததால் அதிர்ச்சி அடைந்த யாஷிகா பானு தனது கணவரிடம் விஷயத்தைக் கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/83d1db2b-6b2.jpg)
இதனைத் தொடர்ந்து இருவரும் வடலூர் அரசு பேருந்து பணிமனைக்கு சென்று விசாரித்ததில் மேற்படி பேருந்திலிருந்து வடலூரில் யாரும் இறங்கவில்லை எனவும், குறிஞ்சிப்பாடியில்தான் 10 நபர்கள் பேருந்திலிருந்து இறங்கியதாகவும் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தம்பதியினர் குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
இதற்கிடையில், அதே பேருந்தில் பயணம் செய்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராமதாஸ் மனைவி கௌசல்யா என்பவர் பேருந்தில் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் வந்து உதவி ஆய்வாளர் டைமன்துரை அவர்களிடம் நகையை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/02730eb7-439.jpg)
இந்தநிலையில், இன்று காலை யாஷிகாபானு மற்றும் அவரது கணவர் குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் வந்து புகார் அளித்ததையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் விசாரணை மேற்கொண்டு மேற்படி நகையுடன் கூடிய பையை தொலைத்தது யாஷிகாபானுதான் என்பதை உறுதிசெய்தார். பின்னர் காவல் நிலையத்தில் நகைப்பையை ஒப்படைத்த கௌசல்யாவை வர வைத்து, அவரது முன்னிலையில் 5 1/2 பவுன் நகையை யாஷிகா பானுவிடம் நேரில் ஒப்படைத்தார்.
பின்னர் கெளசல்யாவின் நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“