மதுவிலக்கு போலீசார் சார்பில் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் இரண்டு, மூன்று, நான்கு சக்கரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், போலீசாரால் பிடிக்கப்பட்ட, நீண்ட நாட்களாக வழக்கு முடிக்கப்படாத வாகனங்களை பொதுமக்களுக்கு ஏலத்திற்கு விடப்படுவது வழக்கம். இந்த ஏலம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை விடப்படுகிறது.
இதன்படி, இன்று காலை கடலூர் எஸ்.பி அலுவல மைதானத்தில் போலீசாரால் பிடிக்கப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் இன்று நடந்தது. ஏலம் கேட்க வருபவர்களுக்கு காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏலம் கேட்க வருபவர்கள் நேற்று ரூ. 1000 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே இந்த ஏல நேரத்தில் கலந்து கொள்ள முடியும். ஏலம் விடப்படும் வாகனங்கள் உரிமையாளர் வந்து கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்த ஏலத்திற்கான மினிமம் தொகையை கட்டி வாகனத்து ஒப்படைக்கப்படும்.
இந்த நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன. இந்த ஏலத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள காய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கலந்து கொண்டார். துப்புரவு பணி செய்து வரும் இவர், கடந்த ஜூன் மாதம் இரு சக்கர வாகனத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது மதுவிலக்கு போலீசார் வாகன சோதனை செய்யும் போது அவரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியாக அவர் மீது வழக்குப பதிவு செய்துள்ளனர். மேலும், அபராதம் செலுத்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் எடுத்துக் கொள்ளுபம்படி போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து, துப்புரவு பணி செய்யும் ஐயப்பன் அபராதம் கட்ட பணம் இல்லாததால் ஒரு மாதமாக கடலூர் மதுவிலக்கு போலீஸ் பிரிவில் அந்த வாகனம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வண்டியின் உரிமையாளர் ஐயப்பன் தான் கஷ்டப்பட்டு வாங்கிய வண்டியை எப்படியாவது அபராதம் கட்டி எடுக்க வேண்டுமென நோக்கத்தில் தினந்தோறும் வந்து வண்டியை பார்த்துவிட்டு சென்றுள்ளார். இன்று ஐயப்பன் அவரது மனைவி இருவரும் ஏலத்திற்கு வந்து கலந்து கொள்வதற்காக ரூபாய் ஆயிரம் டோக்கன் வாங்கிக்கொண்டு கலந்து கொண்டனர்.
ஆனால், அவர்களுடைய இரண்டு சக்கர (ஹோண்டா சைன்) வண்டியை பார்க்கும் போது அதிலிருந்து முக்கிய பொருளை காணாமல் போய் இருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவன் மனைவி இருவரும் ஏலத்தில் இருந்த எஸ்.பி ஜெயக்குமார் காலில் விழுந்து கதறி அழுதனர். தங்களது வண்டியில் அனைத்து பொருளையும் திருடி விட்டனர் என்றும், தங்கள் வண்டி தனக்கு தேவை பொருட்களை கண்டுபிடித்து கொடுக்குமாறும் கெஞ்சியுள்ளனர்.
இதனைப் பார்த்து ஒன்றும் செய்வதறியாத கோபம் அடைந்த எஸ்.பி ஜெயக்குமார், அங்கிருந்த டி.எஸ்.பி சார்லஸ் மற்றும் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோருக்கு உடனே கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். வண்டியில் இருந்த பொருளை திருடியது காவலராக இருந்தாலும் அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஏலம் கேட்க வந்தவரும் மத்தியில் நடந்ததால் வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விட்டது.