நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராடம் நடத்திய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராதமதாஸ் தலைமையில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தின் போது அன்புமணி பேசியதாவது “ தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது. என்.எல்.சி தற்போது தமிழகத்திற்கு தேவையில்லை . மண்ணையும் மக்களையும் அந்த நிர்வாகம் அழித்துக் கொண்டிருக்கிறது.
நிலத்தை கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்நிறுவனம் கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு உதவவில்லை. மாவட்டத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. ஏக்கருக்கு ரூ. 5 கோடி கொடுத்தாலும் ஏற்க மாட்டோம்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து அன்புமணி மற்றும் பா.ம.க.வினர் என்.எல்.சி நிறுவனத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் காவல்துறையினருக்கும் பா.ம.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அன்புமணியை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் பா.ம.கவினர் காவல்துறை மீதும், வாகனங்கள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதியம் கைதான அன்புமணி, மாலை விடுவிக்கப்பட்டார். இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றம் ஒரளவு தணியும் என்று கருதப்படுகிறது. அன்புமணி கைதை தொடர்ந்து, கடலூரில் மாலை 6 மணிக்கு மேல் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளி மாணவ-மாணவியர்கள் வீடு திரும்பிவிட்டனரா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“