கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இப்பள்ளியில் கடலூர் வண்டிப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஞானபழனி (56) என்பவர் 10 ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரிடம் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஞானபழனி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கடந்த 14 ஆம் தேதி மாணவிகள் தலைமை ஆசிரியர் முருகன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் புகார் அளித்தார்கள். அதன்பேரில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கடலூர் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து அரசு மாதிரி பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் ஞானபழனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.