இன்றைய இளைஞர்களின் எதிர்காலம், போதைப்பொருட்களின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழியும் அபாயத்தை உணர்ந்து, கடலூர் மாவட்ட காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தினார்.
இந்நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டனர். அப்போது பேசிய எஸ்.பி. ஜெயக்குமார், போதைப்பொருட்கள் ஒரு மனிதனின் உடல்நலம், மனநலம், குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையை எவ்வாறு சீரழிக்கின்றன என்பதை விரிவாக விளக்கினார். போதைப்பொருட்களின் பயன்பாடு குற்றச்செயல்களுக்கும், சமூகப் பாதுகாப்பிற்கும் எவ்வாறு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/11/whatsapp-image-2025-2025-08-11-13-25-34.jpeg)
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/11/whatsapp-image-2025-2025-08-11-13-25-04.jpeg)
"நீங்கள் அனைவரும் சமூகத்தின் தூண்கள். உங்களுக்குக் கிடைத்த இந்த விழிப்புணர்வை, போதைப்பொருட்களுக்கு அடிமையான நபர்களுக்கும் கொண்டு சென்று, அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்," என மாணவர்களுக்கு அவர் ஊக்கமளித்தார். இந்தச் சமூகப் பொறுப்பை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்று ஒன்றையும் நட்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோடீஸ்வரன், கல்லூரிச் செயலர் டாக்டர் சுவாமிநாதன், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.