கடலூரில் ஒருதலைக் காதல் விவகாரத்தில், வகுப்பிற்குள் புகுந்து ஆசிரியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா. ரம்யா குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்.22ம் தேதி குறிஞ்சிப்பாடி பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியை ரம்யாவை, ராஜசேகர் (வயது 23) என்பவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். ஒருதலைக் காதலால், இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜசேகரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், மீனாலட்சுமி, டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ராஜசேகரின் சொந்த ஊரான விருத்தகிரி குப்பத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்புளான்குளம் முந்திரிகாட்டு பகுதிக்கு இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய வாலிபர் பிணத்தை மீட்டனர். அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் தூக்கில் தொங்கிய வாலிபர் குறித்து விசாரித்தபோது, அவர் குறிஞ்சிப்பாடியில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர் ராஜசேகர் என்பது தெரியவந்தது. உடனடியாக திருநாவலூர் போலீசார் இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ராஜசேகரின் உடலை மீட்டனர். அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.
பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர், தன்னை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது சகோதரிக்கு குறுச்செய்தி மூலம் தகவல் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒருதலைக் காதல் விவகாரத்தில் ஆசிரியையை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.