கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் உமாராணி (வயது 45). இவரது கணவர் வேல்முருகன் சிங்கப்பூரில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்தார் அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், திருச்சோபுரத்தில் ரத்த பரிசோதனை லேப் நடத்தி வரும் அனிதா என்பவருக்கும் உமாராணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தனது கணவர் சம்பாதித்த பணத்தை உமாராணி வைத்திருப்பதை தெரிந்து கொண்ட அனிதா அவரது மாமா நடராஜன் மகன் சுந்தர் வெட்டிவேர், முந்திரி வியாபாரம் செய்து வருவதாகவும், மேலும் லேப் விரிவாக்கிற்கு பணத்தை கொடுத்தால் பார்ட்னராக சேர்த்து அதிக லாபம் கிடைக்கும் என கூறியிருக்கிறார். இதனை நம்பி 8 தவணைகளில் ரூபாய். 51,50,000 கொடுத்துள்ளார் உமாராணி.
பணத்தை பெற்றுக் கொண்ட அனிதா தன்னிடம், சொன்னபடி செய்யமாலும், வாங்கிய பணத்தை கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாக உமாராணி புகார் அளித்துள்ளார். மேலும், பணம் கேட்டு அனிதா வீட்டுக்கு சென்றபோது, பணத்தை கொடுக்க முடியாது என கூறி மிரட்டி வருயதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அனிதா மீது கடலூர் மாவட்ட குற்ற பிரிவில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு குருமூர்த்தி , உதவி ஆய்வாளர் லிடியா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனிதா (வயது 34, க/பெ , ரமேஷ் எண் 600, தோப்பு தெரு, திருச்சோபுரம், தியாகவல்லி) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.