கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று நிகழ்ந்த ரயில் விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெரும் விபத்துக்கு அப்பகுதியில் இருந்த கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூட மறந்து தூங்கியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ரயில்வே கேட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா என்ற நபர் பணியில் இருந்ததால் மொழி பிரச்சனை என்றும் ஒரு பக்கம் பேசப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் அப்பகுதியில் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாக வேன் ஓட்டுநர், கேட் கீப்பர், ரயில் ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த இரண்டு மாணவர் மற்றும் வேன் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், சாருமதி (16), விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் ஜூன் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
அதேநேரம், தமிழகத்தைச் சேர்ந்தவரை புதிய கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, செம்மங்குப்பம் பகுதிக்கு இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் புதிய கேட் கீப்பராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சமும், பலத்த காயமடைந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், லேசாக காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர், வேன் ஓட்டுநர், ரயில் ஓட்டுனர் உள்ளிட்ட 13 பேருக்கு கவனக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி திருச்சி மண்டல கோட்ட அலுவலகத்தில் இருந்து சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராககவும் உத்தரவிடப்பட்டுள்ளது. செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித்குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
க.சண்முகவடிவேல்