New Update
00:00
/ 00:00
கடலூர் மாவட்டத்தில் கடல் வழியாக நுழைய முயன்ற 12 பேரை இன்று காலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கடலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படை சார்பில் நடத்தப்பட்ட சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், கடல் வழியாக ஊடுருவ முயன்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாஜ் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் ரெட் ஃபோர்ஸ் எனப்படும் காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் தீவிரவாதிகள்போல் சாதாரண உடையில் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள்.
இவர்களை புளு ஃபோர்ஸ் எனப்படும் கடலோர பாதுகாப்பு படையினர், ஊர் காவல் படையினர், கப்பல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் ஊருக்குள் நுழையாமல் பிடிக்க வேண்டும்.
இன்று காலை 5 மணி முதல் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதில் கடலோர பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பிரபாகரன், மற்றும் காவலர்கள் அரவிந்த், சதீஷ்குமார், பாஸ்கர், கவியரசன் உள்ளிட்ட போலீசார் கடலூர் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடலூர் முதுநகர் அருகே உள்ள ராசாபேட்டை கடல் பகுதியில் சுமார் 4 நாடிகல் மைல் தொலைவில், ஒரு படகில் வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், தீவிரவாதிகள்போல் சாதாரண உடையில் வந்து, கடலூர் துறைமுகம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நுழைந்து சதி வேலையில் ஈடுபட இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த 4 போலி வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர்.
இதேபோல புதுச்சேரி மூர்த்திகுப்பம் கடல் பகுதியில் ஒரு படகில் வந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்களும் சாதாரண உடையில் வந்து புதுச்சேரியில் சதி வேலையில் ஈடுபட இருப்பது தெரியவந்தது.
அதன் பேரில் போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர். மேலும் கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செய்தி: பாபு ராஜேந்திரன் கடலூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.