கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை வாழ்வு மையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு குப்பை அள்ளும் வாகனத்தில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் சிதறிக்கிடந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தில் தேர்தல் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் மை பாட்டில்கள், சீல், முத்திரை போன்ற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவம் நடந்த அன்று காலை, குப்பை சேகரிப்பதற்காக தூய்மைப் பணியாளர் ஒருவர் வாகனத்தை எடுக்கச் சென்றபோது, குப்பை வண்டியில் சிதறிக்கிடந்த வாக்காளர் அட்டைகளையும், தேர்தல் பொருட்களையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்த தகவல் கடலூர் தாசில்தார் மகேஷ் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் தாசில்தார் மகேஷ் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், குப்பை வண்டியில் சிதறிக்கிடந்த 47 வாக்காளர் அடையாள அட்டைகள், 80 மை பாட்டில்கள், 10-க்கும் மேற்பட்ட சீல், ரப்பர் ஸ்டாம்பு, அரக்கு, பேட்ஜ் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சொந்தமான அட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு உரியவை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் லூர்துசாமி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கடலூர் வந்து, பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி கடலூர் வந்தன என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கராபுரம் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, பழைய இரும்புப் பொருட்கள் வாங்கும் கடைக்கு விற்பனை செய்துள்ளனர். அப்போது, தவறுதலாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து இரும்பு கடையில் போட்டுள்ளனர்.
அந்த இரும்பு கடையில் இருந்த பொருட்களை கடலூர் வியாபாரி ஒருவர் வாங்கி வந்துள்ளார். அவர் அவற்றை பிரித்து பார்த்தபோது வாக்காளர் அட்டைகள் இருப்பதை அறிந்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள குப்பை அள்ளும் வாகனத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாபு ராஜேந்திரன், கடலூர்