சென்னையில் பரபரப்பு : புழல் எரியில் கோடிக்கோடியாக மிதந்த ரூபாய் நோட்டுகள்!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன

சென்னை புழல் அருகே 35 மூட்டைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிழிந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 30 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கிழிந்த ரூபாய் நோட்டுக்கள்:

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்புநீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனையடுத்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தன. அப்போது ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக பொதுமக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர்.

ஆனால் சிலர் வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்தவர்களால் வங்கிகளில் நேரடியாக செலுத்தி பணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் பலர் ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசினர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே நேற்றைய தினம் (27.11.18) மூட்டை மூட்டையாக பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போலீசார், 35 மூட்டைகளையும் பறிமுதல் செய்து பிரித்து பார்த்தபோது, மூட்டையில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கைப்பற்றிய போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், இன்று புழல ஏரியிலிருந்து 500 மீட்டர் தொலைவில்  புதிய மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த மூட்டைகளை கைப்பற்றி சோதித்த பார்த்த போது,  துண்டு துண்டாக கிழிக்கப்பட்ட நிலையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளனர்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட மூட்டைகளில் இருந்த பணத்தின் மதிப்பு 30 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close