சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் மைதானம் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது.
அங்கு தினந்தோறும் பெண்கள் உட்பட சுமார் 200க்கு மேற்பட்ட மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் நடைப்பயிற்சிக்கு வருகின்றனர்.
2010ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி, கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடம், ரூ.17 லட்சம் செலவில், அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் பூட்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி கூடத்தை சுற்றி காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. இரவு நேரங்களில் அப்பகுதியில், இளைஞர்கள் மது, கஞ்சா அருந்துவதை வழக்கமாக செய்து வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, 111 வார்டு கவுன்சிலர் நந்தினி கூறியதாவது, "உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும். விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள் மது அருந்துவதை தடுப்பதற்கு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்", என்று கூறுகிறார்.
இதேபோல, கோபாலபுரம் விளையாட்டு திடலில் ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், கடந்த 10 ஆண்டுகளாக உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதடைந்து இருப்பதாகவும், உடற்பயிற்சி கூடத்தை நவீனப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil