திருச்சி சர்வதேச விமான நிலைய சரக்கு முனையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதும், இங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஜவுளி, அரிசி, மண்பாண்டங்கள், கருவாடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Advertisment
அந்தவகையில், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களை இறக்குமதி செய்தனர். பின்னர் சுங்கவரி பிரச்சனையில் அந்த நிறுவனங்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என எதிர்பார்த்து இன்று 12 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இதுவரை யாரும் அந்த மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வரவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.
12 வருட காலமாக சுங்கவரித் துறையின் குடோனில் பாதுகாக்கப்பட்டு வந்தது.இதைத் தொடர்ந்து சுங்க இலாக அதிகாரிகள் அந்த வெளிநாட்டு மது நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்பாரின்றி கிடக்கும் மது பாட்டில்களின் காலாவதி குறித்து விசாரித்தனர். அப்போது அந்த மதுபான பாட்டில்கள் காலாவதி ஆகிவிட்டது என தெரிவித்தனர்.
Advertisment
Advertisements
இதையடுத்து மதுபாட்டில்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் அவற்றை கரூரில் உள்ள குப்பைக் கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக அழிக்கும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 8,000த்துக்கும் அதிகமான ஒயின் பாட்டில்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் முழுவதுமாக கொட்டி அழிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட ஒவ்வொரு மது பாட்டில்களின் விலையும் இந்திய ரூபாய் மதிப்புக்கு ரூ.5000 இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தமாக இன்று ரூ.4 கோடி மதிப்பிலான மது பாட்டில்களில் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் இலட்சியவர்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் கரூர் குப்பைக்கிடங்கில் எடுத்துச்சென்று அழிக்க என்ன காரணம் என்றும், திருச்சி அரியமங்கலத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு குப்பைக் கிடங்கில் அதை அழித்திருக்கலாமே என்றும், அதேநேரம், மதுபாட்டில்களுக்கு காலாவதியா? புதுகதையா இருக்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
மதுபாட்டில்களைப் பொறுத்தவரை, பீர் தவிர ஏனைய அனைத்தும் நாள்பட நாள்பட அதனுடைய மதிப்பு மற்றும் சுவை கூடுவதைத்தான் எல்லோரும் அறிந்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் எதற்காக என்றும், திருச்சியில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் கரூரில் ஏன் அழிக்கவேண்டும் என கேள்வி எழுப்பியிருப்பதும், கரூரில் டாஸ்மாக் தொடர்புடைய சிலரின் வீடுகளில் அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil