தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்கள் மிகவும் பழமையானதும் பிரசித்திப்பெற்றதுமாகும். இந்த விமான நிலையங்கள் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த சுற்றுலா, வணிக பயன்பாட்டிற்கு உள்நாடு, அயல்நாடு பயணிகள் வந்துசெல்ல ஏதுவாக அமைந்திருந்தாலும், கடத்தல் சம்பவங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கின்றது.
அந்தவகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் அதிக அளவில் தங்கம், அயல்நாட்டு கரன்சி போன்றவைகளை கடத்தி வருகின்றனர்.
அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் என்ற பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வந்தது.
மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளார். இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்க்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக சுங்கத்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும், இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம், ஒரு கிலோ தங்கத்தை லாவகமாக கடத்த முற்பட்ட மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில், சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதும், நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.