நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும், தி.மு.க அரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க சார்பில் கடலூரில் நேற்று (டிசம்பர் 17) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை எம்.பி-யும், முன்னாள் தமிழக அமைச்சருமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “மத்திய பாஜக அரசு சொல்லும் அத்தனை வேலைகளையும் திமுக தலையில் தூக்கி வைத்துச் செய்து கொடுக்கிறது. என்.எல்.சி விவகாரத்திலும் கூட அதே தான் நடந்துள்ளது. அவர்கள் டெல்லிக்குப் போனால், அப்படியே மாறிவிடுகிறார்கள். மத்திய அரசிடம் கெஞ்சுகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைக்கப் போகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள். இல்லை என்றால் காங்கிரஸை விட்டு விலகுங்கள் என்பதே பா.ஜ.கவின் நிபந்தனையாக உள்ளது” என்று பேசினார்.
இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், “அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி.வி. சண்முகம் பாஜக-வுடன் திமுக கூட்டணி வரும் என்றும், திமுகவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக போராடி வரும் பாஜக எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை.
மேலும், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்றெல்லாம் ‘நிதானமில்லாமல்’ பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பாஜக குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளன. இந்நிலையில் கூட்டணி கட்சியான பாஜக குறித்து அதிமுக மூத்த நிர்வாகி பேசிய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/