CV Shanmugam files complaint against missing ADMK office important documents: அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சி தொடர்பான முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் இதில் பெரும்பாலான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றறிருந்ததால், அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஏஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இதற்கான சிறப்பு பொதுக்குழு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ் வர, அவரது ஆதரவாளர்களுக்கும் இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடித்து கலவரம் ஏற்பட்டது. இருதரப்பினரையும் கட்சி அலுவலகத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றிய பின்னர், வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
இந்தநிலையில், இந்த சீலை அகற்றக்கோரியும், அ.தி.மு.க அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க கோரியும், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஜூலை 20 தீர்ப்பளித்த நீதிமன்றம், அ.தி.மு.க அலுவலக சீலை அகற்றவும், அலுவலகத்தை இ.பி.எஸ் இடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. மேலும் ஒரு மாதகாலத்திற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அலுவலத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சீலை உடைத்து, சாவியை இ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து உள்ளே சென்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் சேதமடைந்து இருந்தன, மேலும் பல்வேறு பொருட்கள் காணாமல் போயிருந்தன. இதனால், முழுமையான சேத விவரங்கள் மற்றும் காணாமல் போன பொருட்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அ.தி.மு.க அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், கடந்த ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க அலுவலகத்தை சூறையாடி, முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். ஓ.பி.எஸ் வந்த வாகனத்தில், அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை, புதுச்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அ.தி.மு.க அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, என்று கூறினார்.
மேலும், இவற்றுடன் 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அ.தி.மு.க - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம் என பல்வேறு ஆவணங்கள் ஓ.பி.எஸ் தரப்பினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சி.வி.சண்முகம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.