AIADMK General Council Meeting: CV Shanmugam press meet Tamil News: அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள வனகரத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களால் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பேசிய அவர் வருகிற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், இது சட்ட விரோதமானது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூறி இருக்கிறது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் சார்பில், மனோஜ் பாண்டியன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் ஒப்புதல் வழங்கவில்லை. சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்டமுடியும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்தியாளர்களுக்கு சிவி சண்முகம் பேட்டி அளித்தார். அப்போது அவர், "அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது." என்கிற பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு:-
"பொதுக்குழு உறுப்பினர்கள் 5 இல் ஒரு பங்கு பேர் கையெழுத்து போட்டு கொடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்ட வேண்டும். நேற்று நடைபெற்ற பொதுக்குழு முறையற்றது எனக்கூறிய வைத்திலிங்கம் கருத்து ஏற்புடையது இல்லை. பொதுக்குழுவை கூட்ட எந்த ஆட்சேபனையும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. ஓபிஎஸ் கையெழுத்திட்டு கூட்டப்பட்ட பொதுக்குழுவை முறையற்றது என்கிறாரா வைத்திலிங்கம்?.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. பன்னீர் செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர்.
அதிமுகவின் சட்டவிதி 19ன் படி முறையாக பொதுக்குழுவை கூட்டினோம். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்; அதுதான் அதிமுகவின் சட்ட விதி.
பொதுக்குழுவில் தான் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவைத்தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது. எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார். இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம் என்று கட்சியின் சட்ட விதி கூறுகிறது.
மேலும், அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம்.
இவ்வாறு சிவி சண்முகம் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.