திமுக ஆட்சியில் எதிர்த்து தமிழகத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று பெருந்திரளாக கூடியுள்ள அதிமுக தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை போராட்டத்தின்போது வெளியிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை இந்த திமுக அரசால் கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள் என சவால் விடுத்த அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வீடுகளிலேயே சோதனை நடத்துவோம் என்றும் அவர்களை சட்டையை கழற்றி அமர வைப்போம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் திமுக தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை இல்லாமல் வெங்கடாசலம் இருந்தார் என்றும் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் ஒருவர் வெங்கடாசலத்திடம் ரூபாய் 10 கோடி கேட்டதாகவும் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு பின்னால் அரசியல் உள்ளது என்றும் எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றார். ஆட்சிக்கு வந்தவுடன் பழிவாங்கும் செயலில் தான் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. வெங்கடாச்சலத்தை பதவி விலக வற்புறுத்தியது. ஆனால் அவர் மறுக்கவும், பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார். தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ. இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆர்பாட்டத்தில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil