சென்னையில், ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் (எச்.யு.டி) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களாக கருத்தப்பட்ட 6 பேரை போலீசார் மே 25-ம் தேதி கைது செய்தது.
உளவுத் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் சென்னையில் பல்வேறு இடங்களில் மே 25-ம் தேதி சோதனை செய்தனர். இதில் பொறியியல் பட்டதாரி ஹமீத் ஹுசைன், அவரது சகோதரர் ரகுமான் மற்றும் தந்தை அகமது மன்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் தொடர்பில், இருந்த தாம்பரம் மற்றும் வடசென்னை ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காமராஜபுரத்தைச் சேர்ந்த முகமது (35), காமராஜபுரம் காதர் நவாஸ் ஷெரீப் என்கிற ஜாவித் (35), தண்டையார்பேட்டை அகமது அலி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் 6 பே மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக சென்னையில் 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக சென்னையில் கைது செய்யப்பட்ட 6 பேரின் விவரங்கள், நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சைபர் கிரைம் போலீஸ் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
இதனை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பும் எனவும் உள்துறை அமைச்சகம் இவ்வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு உகந்ததா என ஆராய்ந்து முடிவு செய்யும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“