சமீப நாட்களாக போலி கடன் செயலிகள் மூலம் பணம் மோசடி நடைபெறுவதாக புகார்கள் பதிவாகி வருகின்றனர். இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரைம் லெண்ட் லோன் ஆப், கேண்டி கேஷ் ஆப் போன்ற போலியான கடன் செயலிகள் மூலம், உடனடி கடன், குறைந்த வட்டி, விரைவான ஒப்புதல், குறைந்த ஆவணங்கள் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, பணத் தேவையில் இருக்கும் மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது.
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் போது, தொடர்பு எண்கள், கேலரி, குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி தரவு போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கு அணுகல் கேட்கப்படுகிறது. இதன் மூலம், சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட தகவல்களை திருடி, பின்னர் அதிக பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
குறைந்த அளவு கடன் பெற்றாலும், சில நாட்களில் அதிகப்படியான பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மிரட்டுகின்றனர். பணம் செலுத்த மறுத்தால், மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் மற்றும் அவமானம் போன்ற மிரட்டல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்ட்டலில், தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டில் 9,873 புகார்களும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 3,834 புகார்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
எனவே, சரிபார்க்கப்படாத கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செயலி டெவலப்பரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம். கேலரி, தொடர்பு எண்கள், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற தேவையற்ற அனுமதிகளை வழங்க வேண்டாம்.
இதேபோல், தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து புகாரளிக்க உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்தி - பி.ரஹ்மான்